Saturday, 25 June 2016

ஸந்தியாவந்தனம்


ஸந்தியாவந்தனம் பண்ணு என்றால், இக்காலத்தில், "செய்யமாட்டேன். அந்தப் பலன் எனக்கு வேண்டாம்" என்று சொல்லுகிறார்கள். அவர்களுக்கு மீமாம்ஸையால் ஸுலபமாகப் பதில் சொல்லிவிடலாம். ஸந்தியாவந்தனம் என்பது பலனக்காகப் பண்ணும் காம்யமான (optional) கர்மா இல்லை; அதைப் பண்ணாமற் போனால் உபத்திரவம் உண்டாகும் என்று மீமாம்ஸை சொல்கிறது!
பண்ணினால் பலன் என்பது நியாயம். பண்ணாவிட்டால் உபத்திரவம் என்பது என்ன நியாயம்? ஸந்தியாவந்தனம் பண்ணாவிட்டால் தோஷம் என்கிறார்கள். பண்ணினால் ஐச்வரியம் வரும் என்று சொல்லமாட்டார்கள். செய்யாவிட்டால் உபத்திரவம் என்னும் வகையிற் சேர்ந்தது அது.
கோவிலில் அர்ச்சனை, அபிஷேகம், அன்னதானம் முதலியவை பண்ணினால் விசேஷ பலன் உண்டு என்று சொல்லுகிறார்கள். அவை "கரணே அப்யுதயம்" என்னும் வகையைச் சேர்ந்தவை. இது நியாயமாகப் படுகிறது.
"அகரணே ப்ரத்யவாயம்" என்பது நியாயமா? லோகத்தில் அதற்கு திருஷ்டாந்தம் உண்டா?
உண்டு.
நாம் பிச்சைக்காரனுக்கு அரிசி போடுகிறோம். ஏதாவது ஸொஸைட்டிக்கு நன்கொடை கேட்டால் நூறு, இருநூறு ரூபாய் கொடுக்கிறோம். பரோபகாரம் பண்ணினால் புண்ணியம் உண்டென்று பண்ணுகிறோம். சில சமயங்களில் உபகாரம் பண்ண வேண்டாமென்று தோன்றுகிறது. புண்ணியம் வேண்டாமென்று நினைக்கிறோம். அப்பொழுது முடியாது என்று சொல்லி விடுகிறோம். கடமையைச் செய்ய வேண்டியதுதான்; அதற்குமேல் தானம், தர்மம் இவை போன்றவைகளைச் செய்ய முடியாவிட்டால் பெரிய தோஷம் என்று சொல்ல முடியாதுதான்;
ஒருவனிடம் நாம் 500 ரூபாய் கைமாற்று வாங்கி இருந்தோம். அதைத் திருப்பித் தராமல் அவனிடம், "உனக்கு 500 ரூபாய் கொடுக்கிற புண்ணியம் எனக்கு வேண்டாம்" என்றால் அவன் விடுவானா? 'நான் புண்ணியத்திற்கு வரவில்லை. கொடுத்ததைக் கேட்கத்தான் வந்தேன்.' என்று சொல்லுவான். கேஸ் போட்டு, நமக்கு அதிகப்படி தண்டனையும் வாங்கி் வைப்பான். இது "அகரணே ப்ரத்யவாய ஜனக"த்தைச் சேர்ந்தது.
அதைப் போலத்தான் ஸந்தியாவந்தனமும். ஸந்தியாவந்தனம் பண்ணமாட்டேன் என்பது வாங்கின கடனைத் திருப்பித் தர முடியாது என்கிறதைப் போல.
தமிழில் ஸந்தியாவந்தனத்தைக் காலைக் கடன், மாலைக் கடன் என்றே சொல்வார்கள். அந்தப் பெயர்கள் மிகவும் அழகாய் இருக்கின்றன.
'கடன் வாங்கின திருஷ்டாந்தம் சொன்னால் போதாது. யார் எங்கே கடன் வாங்கினார்கள்? ஸந்தியாவந்தனம் யாரிடம் கடன் வாங்கப்பட்டது?' என்று சிலர் கேட்கலாம்.
வேதத்தில் "தைத்திரீய ஸம்ஹிதை" (Vl-3) யில் "பிராம்மணன் பிறக்கும் பொழுதே மூன்று கடனோடு பிறந்திருக்கிறான். ரிஷிருணம், தேவருணம், பிதிர்ருணம் என்று மூன்று கடன்கள் உண்டு" என்று சொல்லியிருக்கிறது. "வேதம் ஓதுவதால் ரிஷிக்கடனும், யாகமும் பூஜையும் ஸந்தியாவந்தனாதி உபாஸனைகளும் பண்ணுவதால் தேவர்கடனும், தர்ப்பணம் சிரார்த்தம் இவற்றால் பிதிர்கடனும் தீர்கின்றன" என்கிறது. கடன் வாங்கினது நமக்குத் தெரியாது. தெரியாததை வேதம் சொல்லியிருக்கிறது. அதைக் கொண்டு நாம் யுக்தி பண்ணிப் பார்க்க வேண்டும். நம்பிக்கையுள்ளவர்களுக்கு அதை அநுஸரித்த யுக்தி தோன்றும். இல்லாதவர்களுக்கு விபரீத யுக்தி தோன்றும்.
இரண்டு ஸஹோதரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் மாஜிஸ்டிரேட் உத்தியோகம் பார்க்கிறான். மற்றவன் வைதிகன். முதல்வனுக்குக் கச்சேரி(court)க்குப் போகிற கடன் ஏற்பட்டிருக்கிறது. அவன் கச்சேரிக்குப் போகாமல், "இரண்டாமவன் போகவில்லையே; நான் மட்டும் எதற்காகப் போகவேண்டும்?" என்றால், "நீதான் மனுப்போட்டாய்; வேலை செய்யும்படி உத்தரவு போட்டோம்; நீ வருவதாக ஒப்புக் கொண்டாய். ஆகையால், நீதான் வரவேண்டும்'' என்று அதிகாரிகள் சொல்லுவார்கள். அதைப் போல நல்ல கதி வரவேண்டுமென்று நாம் முன் ஜன்மத்தில் செய்த ஸத்காரியம் என்பதான மனுப் போட்டிருக்கிறோம். அதற்கேற்றபடி கர்மாக்களைச் செய்ய வேண்டுமென்று உத்தரவாய் இந்த [நிகழ்] ஜன்மா லபித்திருக்கிறது. உத்தரவு பண்ணியவர் ஒருவர் கண்ணுக்குத் தெரியாமலே ஸர்வ ஸாஷியாக இருக்கிறார். இது வேதாந்தியின் மதம். எந்த வேலைக்காக 'மனு'ப்போட்டோமோ அதுவே நமக்குப் பலனைத் தருகிறது என்பது மீமாம்ஸகர்கள் மதம். கர்ம பலன் தானே நடக்கும் (Automatic) என்பது இவர்களுடைய மதம்.


No comments:

Post a Comment