ஏழு பதார்த்தங்களாவன: திரவியம், குணம், கர்மம், ஸாமான்யம், விசேஷம், ஸமவாயம், அபாவம் என்பவை. திரவியம், குணம், கர்மம் இந்த மூன்றும் ஸத்தான பதார்த்தம். அவற்றை இருக்கிறதென்று நம்மால் காட்ட முடியும். அதுதான் ஸத். பாக்கி நான்கும் அப்படிக் காட்ட முடியாதது. "ஸத்தை"யோடு கூடியது முதல் மூன்றுதான். இவற்றில் முதலாவதான த்ரவ்யம் ஸ்தூலமாக காட்டக் கூடியது. ஞானம், ஆசை, ஸந்தோஷம், துக்கம் முதலிய குணங்களைத் தனியாகப் பிரித்துக் காட்ட முடியாது. இவைகளெல்லாம் ஒன்றை ஆசிரயித்தே இருக்கும், தனியாகப் பிரிக்க முடியாது. தாமரை சிவப்பாக இருக்கிறது. சிவப்பு தாமரையினுடைய குணம். அந்தச் சிவப்பைத் தனியாகப் பிரித்துக் காட்ட முடியாது. இப்படி ஒரு ஆசிரயத்தை ஒட்டிக் கொண்டு இருப்பதுதான் குணம். அது எதை ஆசிரியத்திருக்கிறதோ அந்த ஆசிரியந்தான் த்ரவ்யம். சந்தோஷத்தையும் துக்கத்தையும் தனியாகக் காட்ட முடியாவிட்டாலும் ஒருத்தன் ஸந்தோஷமாகவும் துக்கமாகவும் இருப்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறதல்லவா? அப்போது ஸந்தோஷம், துக்கம் இவற்றையும் தெரிந்துகொண்டு விடுகிறோம். சிவப்புத் தாமரையைப் பார்க்கும்போது சிவப்பு என்னவென்று தெரிந்து கொண்டு விடுகிறோம். கர்மம் என்பது காரியம். சலனம், போதல், ஓடுதல் முதலிய வேலைகள் கர்மாக்கள். அவைகளும் திரவியத்தை ஆசிரயத்தே நிற்கும். ஒருவன் ஓடுகிறான், ஓடுதலை அவனிடத்திலிருந்து பிரிக்க முடியாது. அவன் ஓடுகிறான் என்பதைப் பார்க்க முடிகிறது. அப்போது அவன் உட்கார்ந்திருக்கவில்லை, படுத்திருக்கவில்லை என்ற வித்யாஸம் தெரிகிறது. அதனால் ஓட்டத்தை நாம் பார்க்கிறோம் என்று அர்த்தம். ஸாமான்யம் என்பது நாலாவது பதார்த்தம். அது ஜாதியைக் குறிப்பது. பல மாடுகள் இருக்கின்றன. அவைகளுக்குள் மாட்டுத்தன்மை என்னும் ஒரு பொதுமை இருக்கிறது. அதை நாம் ஜாதி என்கிறோம். அது எல்லாப் பசுக்களிடத்திலும் இருக்கிறது. அதுதான் "ஸாமான்யம்". ஒரே மாதிரி இருந்தும் வெவ்வேறாக இருப்பது "விசேஷம்". பசுக்கள் ஒரே ஜாதியாக இருந்தும் அப் பசுக்களிடத்தில் ஒவ்வொன்றையும் தனித்தனியே பிரித்துக் காட்டக்கூடிய சில 'விசேஷ' அடையாளங்கள் இருக்கின்றன. திரிவியத்தையும் குணத்தையும், திரவியத்தையும் அதன் காரியத்தையும், தனித்தனியானவற்றையும் பொதுமையையும், ஒரு முழு வஸ்துவையும் அதன் அவயவங்களையும் பிரிக்க முடியாமல் ஒட்டி வைத்திருப்பதுதான் "ஸமவாயம்" எனப்படுகிறது. அக்னியில் பிரகாசமான ரூபம் இருக்கிறது. அந்தப் பிரகாசத்தையும் ரூபத்தையும் பிரிக்க முடியாது. அது ஸமவாயம். திரவியமும் திரவியமும் சேர்ந்தால் அதை ஸம்யோகம் என்று சொல்வார்கள். இவை ஒன்றோடொன்று சேராமல் தனித்தும் இருக்க முடியும். திரவியமும் குணமும் சேர்ந்தால் அது ஸமவாயம்; திரவியமும் கர்மாவும் சேர்ந்தால் அதுவும் ஸமவாயந்தான். குணமும் கர்மாவும் ஒரு திரவியத்தைச் சேராமல் தனித்தும் இருக்க முடியாது.
.....
இந்த ஐந்து குணங்களையும் பகவான் பஞ்ச பூதங்களில் வைத்திருக்கிறார். மண்ணில் ஐந்து குணங்களும் இருக்கின்றன. அதற்கு ரூபம் இருக்கிறது; ருசி இருக்கிறது. நம் உடம்பு, கத்திரிக்காய், வெல்லம் எல்லாம் மண்தான்! மண்ணுக்கு வாஸனை இருக்கிறது. வாஸனை உள்ள புஷ்பம் மண்தான். கடினம், சீதம் உஷ்ணம் முதலியதான ஸ்பரிசத்தால் அறியும் குணங்களும் மண்ணுக்கு இருக்கின்றன. சப்தமுங்கூட இருக்கிறது. நூலைக் கட்டிக் கேட்டால் சப்தம் கேட்கிறது. கட்டையைத் தட்டினால் சப்தம் உண்டாகிறது. ஜலத்தில் கந்தத்தைத் தவிர மிகுதியுள்ள நான்கு குணங்களும் இருக்கின்றன. நாம் வாஸனைப் பதார்த்தங்களைக் கலந்தால்தான் ஜலத்தில் கந்தம் உண்டாகிறது. ஜலத்திற்கு ரூபம், ரஸம், சப்தம், ஸ்பரிசம் என்னும் நான்கும் இருக்கின்றன. ஜலத்தை அடித்தால் சப்தம் உண்டாகிறது. மண்ணில் ஐந்து குணங்களும் இருந்தாலும் மற்ற நான்கிலும் இல்லாமல் அதில் மட்டும் இருப்பது கந்தம். அது அதனுடைய விசேஷ குணம். ஜலம் இல்லாமல் போனால் ரஸம் இல்லை. அதனால்தான் ரஸேந்திரியமாகிய நாக்கில் எப்பொழுதும் தண்ணீர் இருக்கிறது. நாக்கில் நீர் வற்றி மரத்துப் போனால் ருசியை அறிய முடியாது! ரஸம் என்பதற்கே ஜலம் என்று ஒரு அர்த்தம் உண்டு. தேயுவுக்கு (நெருப்புக்கு) ரஸமும் இல்லை, கந்தமும் இல்லை. ரூபம், சப்தம், ஸ்பரிசம் என்ற மூன்றுதான் இருக்கின்றன. அதற்கு ரூபம் விசேஷ குணம். வாயுவில் ரூபம் இல்லை. சப்தமும் ஸ்பரிசமும் மாத்திரம் இருக்கின்றன. அதற்கு ஸ்பரிசம் விசேஷ குணம். அதனால்தான் நம் மேலே காற்று பட்டால் தெரிகிறது. ஆகாசத்திற்கு சப்தம் மட்டுமே உண்டு. வாயுவினால்தான் சப்தம் உண்டாகிறதென்று முதலில் நவீனர்கள் கருதியிருந்தார்கள். கம்பியில்லாத் தந்தி முதலியவை ஏற்பட்ட பிறகு காற்றினுடைய மாறுதல்களுக்கு உட்படாமல் சப்தம் கேட்பதால் ஆகாசத்தினுடைய குணம் அது என்று தெரிந்து கொண்டு வருகிறார்கள்.
.....
ஒரு சின்ன அநுமானத்தை இப்பொழுது பார்க்கலாம். நான் உட்கார்ந்துள்ள இந்த ஸிம்மாஸனம் ஒருவன் பண்ணித்தான் ஆகியிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். பண்ணினவனை நேரில் தெரியாததால் இது பண்ணப்பட்டது என்பதே பொய் என்று சொல்லலாமா? வேறு ஸிம்மாஸனங்களைப் பண்ணி நாம் பார்த்திருக்கிறோம். அதைக் கொண்டு இதையும் பண்ணினவன் ஒருவன் இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்கிறோம். அவனுக்கு இதைப் பண்ணுகின்ற சக்தியுண்டு என்பதையும் அறிந்து கொள்ளுகிறோம். அதைப் போல ஜகத்து எல்லாவற்றையும் பண்ணுகிறவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஸர்வஜ்ஞன், ஸர்வசக்திமான். எல்லாரையும் ரக்ஷிக்கின்றமையால் கருணாநிதியாகவும் அவன் இருக்க வேண்டும். இம்மாதிரி விஷயங்களை ஆக்ஷேபணை, ஸமாதானங்களோடு ஸரியான அநுமானத்தைக் கொண்டு நிர்ணயிப்பது நியாய சாஸ்திரம்.
http://www.kamakoti.org/tamil/Kural109.htm
http://www.kamakoti.org/tamil/Kural109.htm
No comments:
Post a Comment